தேனி

பெரியகுளத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் ஓடைகள், ஆறுகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயப் பணிகளும் அமோகமாக நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களாக போதிய மழை இல்லாததால் குளங்கள் மற்றும் கண்மாய்கள் கடும் வறட்சியைக் கண்டன. கிணற்றில் கூட தண்ணீர் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேபோல் குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்து ஆடியது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வந்ததால் பெரும்பாலான ஓடைகள் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்பட்டது.

இதில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை அதிகபட்சமாக சோத்துப்பாறை அணையில் 175 மி.மீட்டர் மழையும், மஞ்சளாறு அணையில் 122 மி.மீட்டர் மழையும், பெரியகுளத்தில் 106 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

கடந்த ஆறு நாள்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சோத்துப்பாறை அணையில் 36.73 அடி உயர்ந்து அதன் நீர்மட்டம் 109.38 அடியாகவும், மஞ்சளாறு அணையில் 6.29 அடி உயர்ந்து அதன் நீர்மட்டம் 50.09 அடியாகவும் உள்ளது.

மேலும், உபரிவாய்க்கால் மூலம் வரும் நீர்வரத்தால் பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டியைச் சுற்றியுள்ள கண்மாய் மற்றும் குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகவி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவியில் கடந்த எட்டு நாள்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.