வடகிழக்கு பருவமழை சீசனில் முதல்முறையாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் , விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை முதல்  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவமழையின் கடந்த 2 காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தின் வடகடற்கரைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. அடுத்ததாக  3-வது காற்றழுத்த தாழ்வுநிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மழையைப் பெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

.வடகிழக்கு பருவமழையின் முதல் மற்றும் இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலையில் சென்னையின் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும், டெல்டா பகுதிகளுக்கும் நல்ல மழை கிடைத்தது. தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழை ஏதும் இந்த பருவமழையில் இப்போதுவரை இல்லை. இப்போதும் அங்கு வறட்சிநிலைதான் நீடிக்கிறது. 

இந்நிலையில் வடகிழக்குப்பருவமழையின் 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கடந்த இரு முறை இருந்ததைப்போல் இல்லாமல், இந்த முறை வடதமிழக கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருக்கிறது. அதாவது சரியாகச் சொல்லவேண்டுமானால், இலங்கையின் கிழக்கே இருப்பதால், இது இலங்கை வழயாக அரபிக்கடலுக்குள் சென்றுவிடும். ஆதலால், தென்தமிழகத்தில் மேகக்கூட்டமும் அதனால் மழையும் இருக்கும். 28-ந்தேதிக்கு பின், காற்றழுத் தாழ்வு நிலை அரேபியக் கடலுக்குள் செல்லும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.. 

இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் முதல்முறையாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு முறையேனும் கனமழை பெய்யும் என்றும் ,  நாளை முதல் இந்த மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாஞ்சோலை, பாபநாசம் அணை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும். திருநெல்வேலியிலும் மிக கனமழை இருக்கும். விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 நாட்கள் சென்னையில் மிதமான மழையோடு காலநிலை ரம்மியமாக இருக்கும்  என்றும் அவ்வப்போது திடீர்மழையும், சிறு தூறலும் போடக்கூடும் என்றும் சென்னையில் 26,27,28 ஆகிய தேதிகளில் இடைவெளி விட்டு, அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.