சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு மறு உத்தரவு வரும்வரை நிலத்தை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  

முன்னதாக சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் மத்தியிலும்,  சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த 8 வழிச்சாலைக்கு மத்திய அரசு 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நில உரிமையாளர் கிருஷ்ண மூர்த்தி, பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவிகித விவசாய நிலங்களும் 10 சதவிகித வனப்பகுதியும் வருகின்றன என வாதத்தை முன்வைத்தார். மேலும், நில கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின்படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அரசு நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டினர். 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் விதிகள் பின்பற்றப்படவில்லை என வாதிட்டனர். இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மேலும், அரசு அனைத்து விதிகளையும் மீறியதாக யூகத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியாது. நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற முடியாது' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது. மறு உத்தரவு வரும்வரை நிலத்தை கையகப்படுத்த கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 10-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.