ஏர்செல் நெட்வொர்க் சேவை இன்னும் ஓரிரு நாட்களில் சீராகும் என்று அதன் தென் மண்டல நிர்வாக அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 80 சதவிகித நெட்வொர்க் பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சேவையை தொடங்கிய ஜியோ, பல்வேறு அதிரடி சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறினர். இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஏர்செல் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 120 கோடி ரூபாயாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் லாபம், 5 கோடி ரூபாயாக சரிந்தது. 

தனது சேவையை ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தியது. மேலும் டவர் உரிமையாளர்களுக்கு பாக்கி செலுத்தாததால், ஏர்செல் நிறுவன டவர்களும் அணைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், போர்டபிலிட்டியில் வேறு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஏர்சேல் சேவை முடக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் உள்ள ஏர்செல் ஷொரூம்கள் தாக்கப்பட்டன. இன்று 3-வது நாளாக ஏர்செல் சேவை முடங்கியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் ஏர்செல் நிறுவன செயல்பாடுகள் சரி செய்யப்படும் என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்மண்டல நிர்வாக அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 60 சதவிகித பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செயல்பாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று மாலைக்குள் 80 சதவிகித பகுதிகளில் செயல்பாடுகள் சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார். 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து நாங்கள் சேவைகளை விரைவாக வழங்க ஏற்பாடு செய்து வருவதாகவும் சங்கர நாராயணன் கூறினார். 

ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு ஒரே நாளில் 8 லட்சம் பேர் PORT செய்ய விண்ணப்பித்துள்ளனர். இணைய பக்கத்தின் டிராபிக் காரணமாக அது கூட தடைபட்டுள்ளது. எந்த நிறுவனத்தாலும் இவ்வளவு டிராபிக்கை எதிர்கொள்ள இயலாது. எங்கள் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு செல்வதை நாங்கள் தடை செய்யவில்லை. ஆனால் டிராபிக் சிக்கல் தான் பிரச்சனையாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை நான் உணர்ந்துள்ளேன். எங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க சலுகைகளை அறிவிக்கவும் நாங்கள் ஆலோசித்து வருவதாகவும், சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.