கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில், மளிகை கடை வைத்திருக்கும் தந்தையை அரிவாளால் சரிமாரியாக வெட்டியதில் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மகனையும் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் தாக்கியது மகனின் கல்லூரி நண்பன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் கடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (53). இவர் கடைவீதியில் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா.

இவர்களின் மகன் கணேஷ்குப்தா (19). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படிக்கிறார். அதே கல்லூரியில் ராஜேஷ் என்ற மாணவரும் படித்து வருகிறார். இருவரும் நண்பர்கள்,

ராஜேஷ் அடிக்கடி கணேஷ்குப்தாவின் வீட்டிற்கு வந்துச் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் திடீரென்று கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

நேற்று கோவிந்தன், அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். காலை 6 மணியளவில் அங்கு மூன்று பேர் வந்தனர். அவர்கள் கோவிந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு தலை, கழுத்து, காது உள்பட பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி ரேணுகா மகன் கணேஷ்குப்தா ஆகியோர் அங்குச் சென்றனர்.

அப்போது அங்கு கணேஷ்குப்தாவுடன் படித்து வந்த மாணவர் ராஜேஷ் மற்றும் இரண்டு பேர் இருந்தனர். அவர்களில் ராஜேஷ், கணேஷ்குப்தாவின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதே போல கணேஷ்குப்தா திரும்ப தாக்கியதில் ராஜேஷ் தலையிலும் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ராஜேசுடன் வந்த மற்ற இரண்டு பேரும் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி தகவலறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காயமடைந்த கணேஷ்குப்தா, ராஜேஷ் ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலைப் பற்றி தகவலறிந்ததம் தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், இராயக்கோட்டை ஆய்வாளர் சண்முக சுந்தரம் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்றனர்.

அவர்கள், கொலையுண்ட கோவிந்தனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து இராயக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து ராஜேஷ், கணேஷ்குப்தா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறேதும் காரணம் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.