திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெள்ளிர வெளியை சேர்ந்தவர் காளியண்ணன் (43). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குன்னத்தூரை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் அரசு பள்ளிக்கு, தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.

இந்த நிலத்துக்கான வில்லங்க சான்று கேட்டு காளியண்ணன், குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கான கட்டணமாக ரூ.4,745க்கு டி.டி. கொடுத்தார். ஆனால், சான்று கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 30ம் தேதி அளித்த இந்த விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுத்து வில்லங்க சான்றிதழ் தர, அலுவலக தலைமை எழுத்தர் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை சேர்ந்த பஞ்சநாதன் (53) என்பவரை காளியண்ணன் சந்தித்து பேசினார். அப்போது, சான்றிதழ் உடனடியாக வேண்டுமானால், ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காளியண்ணன், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி காளியண்ணன், பஞ்சநாதனுக்கு போன் செய்தார். அதில், அவர் கேட்ட தொகை தயாராக இருக்கிறது. எங்கு வந்து தரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு, மாலையில் அலுவலகத்தில் இருப்பேன். அங்கு வந்து தரும்படி அவர் தெரிவித்தார்.

அதன்படி நேற்று மாலை காளியண்ணன், சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு பஞ்சநாதனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அதை பஞ்சநாதன் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் பஞ்சநாதனை திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெகநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பஞ்சநாதன், கடந்த 2015ம் ஆண்டு முதல் குன்னத்தூரில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.