கடந்த 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பங்கேற்ற 60 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இதனால், நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இரண்டாக உடைந்தது.தற்போது, 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளை தடை விதித்துள்ளது. இருந்தாலும், தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.