government plaaning on first day of school books are issued to students
தேனி
தேனியில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே ஒன்றரை இலட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்திட அரசு திட்டமிட்டு உள்ளது.
வெயில் காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் நாள் ஒத்திவைக்கப்பட்டு அதன்படி பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7–ஆம் தேதி திறக்க இருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை பள்ளிக்கூடம் திறக்கும் நாளிலே விநியோகம் செய்திட அரசு திட்டமிட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1½ இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடித்து தேனி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மையத்தில் இருப்பு வைக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.
பள்ளிக்கூடங்கள் பாடப்புத்தகங்களை வகுப்பு வாரியாகவும், பாடங்கள் வாரியாகவும் தரம் பிரித்து அடுக்கி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும் உள்ளது.
பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி பார்வையிட்டார். புத்தகங்களை பாதுகாப்பாக பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், மழை பெய்தால் நனையாதவாறு மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
