தூத்துகுடி

இந்தாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று மாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் உயர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாள்ர்களிடம் கூறியது:

“கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பாட பிரிவுகள் இருந்தன.

இந்தாண்டில் இளங்கலை பிரிவில் பி.ஏ.வரலாறு, புவி அமைப்பு ஆகிய இரண்டு பாட பிரிவுகளும், முதுகலை பிரிவில் எம்.காம்., எம்.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் ஆகிய நான்கு பாட பிரிவுகளும் கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளன.

முதுகலை பாடப்பிரிவில் இந்த ஆண்டு 12 பேராசிரியர்களும், அடுத்தாண்டு 12 பேராசிரியர்களும் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 57 கலை அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு புதிதாக 270 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் புதிதாக 89 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்வி ஆண்டில் புதிதாக எட்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், மூன்று பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே இந்தாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர்களையும், தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 10 சதவீத மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வகையில், வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் அனைத்துக் கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்ப மனுக்களை வழங்கி, பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜோசப் சுரேஷ், அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலாளர் ஐயாத்துரை பாண்டியன், கூட்டுறவு வங்கி இயக்குனர் அலங்கார பாண்டியன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் அல்லிகண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.