Government action is not enough to control dengue - GK mani
சேலம்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை போதாது என்றும் அது காலம் தாழ்ந்த செயல் என்றும் சேலத்தில் ஜி.கே.மணி தெரிவித்தார்.
பாமக-வின் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சேலம் ஐந்துரோட்டில் நிலவேம்பு கசாயம் நேற்று வழங்கப்பட்டது. இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று அவ்வழியாக வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: “தமிழகத்தில் “டெங்கு” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனால், மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. அதே வேளையில் விழிப்புணர்வு என்பது அவசியம்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை போதாது. இது காலம் தாழ்ந்த செயல். இனி வரும் காலங்களிலாவது டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்திட வேண்டும்.
குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பேரூர், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்.
பாமக சார்பில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் 60 வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். மேட்டூரில் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும்” என்று அவர் பேசினார்.
இதில் பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அருள், பசுமை தாயகம் மாநிலத் துணை அமைப்பாளர் சத்ரியசேகர், மாவட்டச் செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், சாம்ராஜ், துணைச் செயலாளர் அண்ணாமலை, மகளிர் அணி நிர்வாகி கலா உள்பட பலர் பங்கேற்றனர்.
