புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ,ஒரு கோடி ரூபாய் நகைகடன் முறைகேடு புகாரில் வங்கி செயலாளர் மற்றும் மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைதொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் , நகை கடன்கள் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்ததும் என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 

கன்னியாகுமரி, திருப்பத்தூர், மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனையில், லட்சக்கணக்கில் ரூபாய் நகைகடன் பெற்று முறைகேட்டில் ஈடுப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ,ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நகைகடன் முறைகேடு புகாரில் வங்கி செயலாளர் மற்றும் மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் மண்டல ஆய்வு குழு , ஆய்வு மேற்கொண்டபோது 102 நகை பொட்டலங்களில் நகை இல்லாமலே கடன் கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடன்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்களது உறவினர் மற்றும் நிர்வாக குழுவினரது உறவினர்களின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளதா எனும் கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முறைகேட்டில் ஈடுப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுப்பட்ட மொத்த தொகையான ரூபாய் 1.08 கோடி தொகையும் அவர்களிடம் இருந்து கடும் நடவடிக்கை மூலம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேலு வங்கியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதே போல் கடந்த செப்டம்பர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 2 கோடி ரூபாய்க்கு நகை கடன் மோசடி செய்த விவகாரத்தில், தலைவர், பணிநீக்கம் செய்யப்பட்டார். செயலர், துணைச் செயலர், கள அலுவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி, செயலர் தேவராஜ், பலரது பெயரில் நகைக்கடன் கொடுத்ததாக போலி ஆவணங்களை தயார் செய்து மோசடி செய்து கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் 261 நகைக் கடன்கள் வழங்கியதாக, ரூ.2.03 கோடி மோசடியில் ஈடுப்பட்டனர். 

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் 30 சதவீதம் மட்டுமே நகை மோசடி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பல்வேறு குழுக்கள் அமைத்து அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் ஆய்வுக்கு அதே மாவட்ட அதிகாரிகளை அனுப்பாமல், வெளி மாவட்டங்களில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் கூறினார். நகை மோசடி வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேசினார்.