girl student died near by cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பள்ளி மாணவி உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சு.கீணனூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரது 13 வயது மகள் மகாலட்சுமி, கம்மாபுரம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்தார். வழக்கம்போல இன்று பள்ளிக்கு சென்ற மகாலட்சுமி, பள்ளியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மாணவி மகாலட்சுமி, கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த செவிலியர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து அங்கு திரண்ட மாணவர்களும் உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் தான் மாணவி இறந்ததாக குற்றம்சாட்டி, விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் கம்மாபுரத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள், இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். மாணவியின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்தான் மாணவி உயிரிழந்ததாக உறவினர்களும் மாணவர்களும் குற்றம்சாட்டியது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.