ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்கின்றனர். அதில் திருமணமாகாத வாலிபர்கள், நண்பர்களுடன் வீடுகளில் வாடகைக்கு தங்குகின்றனர். சிலர், குடும்பத்துடன் வாடகை வீட்டில் விசிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமம் வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது வீட்டின் முதல்தளத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஒடிசாவை சேர்ந்த சீசர்குமார் (29) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வந்தார். இவரது மனைவி மினோதினி (23).

சீசர்குமார், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். கடந்த 1ம் தேதி காலை சீசர்குமார், சொந்த ஊர் செல்வதாக, வீட்டின் உரிமையாளர் மூர்த்தியிடம் கூறி சென்றார். அதன்பின்னர், அவர் வரவில்லை.

இந்நிலையில் நேற்று காலை சீசர்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மினோதினி, கழுத்து இறுக்கப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சீசர்குமார் சொந்த ஊர் சென்றபோது, உடமைகள் எதையும் எடுத்து செல்லவில்லை. மினோதினி மற்றும் சீசர்குமார் ஆகியோரின் உடைகள், பொருட்கள் அங்கேயே இருந்தது.

சீசர்குமார் பேஸ்புக்கில் அதிக பெண்களுடன், பழக்கம் வைத்துள்ளார். இதனால், மினோதியை திருமண ஆசைக்காட்டி அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தலைமறைவானாரா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.