காதலித்த பெண்ணை இன்னொருவர் திருமணம் செய்வதை அறிந்த காதலன் தன் காதலிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சந்துரு என்பவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தான் வசித்து வந்த அப்பகுதியில் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார்.

 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பெண் வீட்டாரோ, வந்தவாசியை சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் இருவருக்கும் கடந்த 2-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த தகவல் எப்படியோ காதலன் சந்துருக்கு தெரிய வந்தது. இதை அறிந்த காதலன் திருமண நாளான 2-ம் தேதி திருமண மண்டபத்திற்கு விரைந்தார். 

மண்டபத்தின் வாசலில் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்த சந்துரு யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தனது உடலில் 
ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மண்டபத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து  தீயை அணைத்தனர். 75 சதவீத படுகாயங்களுடன் 
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாலும்  அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது.