தமிழக அரசு சார்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் சிறுவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சத்து கிடைக்கும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருத்தணி அருகே கிருஷ்ணா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் தர்ஷினி (9). அதே பகுதியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10ம் தேதி, கிருஷ்ணாசமுத்திரம் பகுதியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுகாதார துறை அதிகாரிகள் சென்றனர். அந்த பள்ளியில் படிக்கும் 175 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை கொடுத்துள்ளனர்.

மாத்திரை சாப்பிட்ட சுமார் 2 மணி நேரத்தில், தர்ஷினி திடீரென மயங்கி விழுந்தாள். இதை பார்த்ததும், பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு, அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், மாணவியின் பொற்றோருக்கும் தகவர் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும், தர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு அலறியடித்து கொண்டு ஓடினர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தர்ஷினி பரிதாபமாக இறந்தாள்.

அரசு சுகாதார துறை சார்பில் கொடுக்கப்பட்ட குடற்புழு மாத்திரையால், தர்ஷினி இறந்ததாக, அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டினர். மேலும், மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.