இராயக்கோட்டை அருகே நல்லராலப்பள்ளியில் 20 காட்டு யானைகளை முகாமிட்டிருந்ததால், அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் இருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன.

இந்த யானைகள், பல குழுக்களாக பிரிந்து நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, போடூர்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நுழைந்து அங்கேயே முகாமிட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓசூர் அருகே சானமாவு காட்டிற்கு 4 குட்டிகள் உள்பட மொத்தம் 60 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வந்தன. அந்த யானைகளை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் வனத்துறையினர் விரட்டினார்கள்.

இதையடுத்து அந்த யானைகள் சினிகிரிப்பள்ளி, பென்னிக்கல், ஊடேதுர்க்கம் காடுகள் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்று விட்டன.

அதில், 20 காட்டு யானைகள் தனியாக பிரிந்து செவ்வாய்க்கிழமை இரவு இராயக்கோட்டை அருகே உள்ள நல்லராலப்பள்ளிக்கு வந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அந்த யானைகளை மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதற்கிடையே நல்லராலப்பள்ளி பகுதியில் 2 யானைகள் கடந்த 2 நாள்களாக முகாமிட்டு அந்த பகுதியிலேயே சுற்றித் திரிகின்றன.

இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்களை இரவு நேரத்தில் விவசாய நிலங்கள் பக்கமாக காவலுக்கு இருக்க வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.