Gandhi Abdul Kalam as the students fight to win their dream collectors Advice
மகாத்மா காந்தி, அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் தங்கள் கனவை நோக்கி பல்வேறுப் போராட்டங்களுக்கு மத்தியிலும் பயணம் செய்து வெற்றிப் பெற்றனர். அதேபோன்று மாணவர்களும் தங்களது கனவுகளில் வெற்றிப் பெற போராட வேண்டும் என்று ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தந்தை பெரியார் அரங்கில், “பொன்விழா ஆண்டு பட்டமளிப்பு விழா” நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சின்னையா வரவேற்றுப் பேசினார்.
ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆயிரத்து 223 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியது:
“ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலக் கட்டங்களில் ஒன்று கல்லூரிப் பருவம். அதனை மாணவர்களாகிய நீங்கள் தற்போது நிறைவுச் செய்துள்ளீர்கள்.
கல்லூரியில் பட்டம் வாங்கிய மாணவர்கள் மனதில் தற்போது அடுத்து என்ன செய்யப்போகிறோம்? என்ற பயமும், ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.
வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் பற்றி நினைக்கும்போது கண்களில் கண்ணீரும், கனவும் காணப்படும். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்று எண்ணாமல் வாழ்க்கை குறித்து கனவு காண வேண்டும்.
மாணவர்களுக்கு தற்போது கனவு காணும் வயதாகும். எதிர்காலம் குறித்து மாணவர்கள் கனவு காண வேண்டும்.
வாழ்க்கையில் பணம், வேலை, அந்தஸ்து எல்லாம் தேவை தான். ஆனால் அதைவிட நாம் கண்ட கனவை நோக்கிச் செல்வது முக்கியமானதாகும். இங்கு கனவுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஓவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். கனவு காணும் வயதில் கனவு காணாமல், 60 வயதுக்கு மேல் அதனை நினைத்து வருத்தப்படுவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
மாணவர்கள் கனவு காண நேரம், வயது, வாய்ப்பு இருந்தும் அதனைப் பயன்படுத்த தவறக் கூடாது. நமது கனவு எது வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் கண்ட கனவை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்.
மகாத்மா காந்தி, அப்துல்கலாம் போன்ற மிகப்பெரியத் தலைவர்கள் தாங்கள் கண்ட கனவை நோக்கி பல்வேறுப் போராட்டங்களுக்கு மத்தியிலும் பயணம் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் அதில் வெற்றிப் பெற்றனர்.
மாணவர்கள் கனவுக்காக கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும். கனவுகளுக்கு எல்லை இல்லை. உங்கள் நம்பிக்கை உங்கள் மேல் தான் இருக்க வேண்டும். கனவை நோக்கித் தொடர்ந்து அயராத முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும்” என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
