found 11 five metal statues while digging for home

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் வீடுகட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன்னால் ஆன 11 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தும் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு மருத்துவமனைத் தெரு, அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் விக்னேஷ்வரன் (36).

இவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு அதற்காக அஸ்திவாரத்துக்குப் பள்ளம் தோண்டும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, மண்ணுக்குள் புதைந்திருந்த ஐம்பொன்னாலான ராமர், சீதை, லெட்சுமணர், பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 11 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 7 சிலைகள் சுமார் 2 அடி உயரத்திலும், 4 சிலைகள் 1 அடி உயரத்திலும் காணப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த, வேதாரண்யம் வட்டாட்சியர் ஆர். சங்கர் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தினார். பின்னர், அந்த சிலைகள் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.