நள்ளிரவில் பாரில் மது விற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் தொகுதியில் கடந்த இரண்டு முறை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். இவர், இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நாஞ்சில் முருகேசன், ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் இல்லாததால், வேறு தொழில் இன்றி தவித்து வந்தார். இந்த நிலையில் புத்தேரி பகுதியில் டாஸ்மாக் கடையையொட்டி, பார் ஒன்றை நடத்தி வருகிறார்.

நாஞ்சில் முருகேசன் நடத்தும் பாரில், 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வடசேரி போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.வான நாஞ்சில் முருகேசன், பாரில் மது விற்றுக் கொண்டிருந்திருக்கிறார். முருகேசனுடன், கோபாலன், இளங்கோ, பிரபு ஆகியோரும் இருந்துள்ளனர்.

இதனைப் பார்த்த போலீசார், நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டவர்களை வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்த 22 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டவர்கள் மீது, அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாஞ்சில் முருகேசன் மீதுவழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர்.