காணாமல் போய் மீண்டும் இல்லம் வந்து சேந்தவனை, இழப்பேன் என ஒரு கனம் கூட எண்ணியதில்லை- விஜயபாஸ்கர் கண்ணீர் கவிதை
தமிழ்நாட்டின் வாடிவாசல்களில் எல்லாம் பம்பரம் போல் சுற்றிச் சுழன்ற என் கருப்பு கொம்பன் இன்று அதிகாலை தன் பயணத்தை முடித்துக் கொண்டான். வாடிவாசல் உன் வருகைக்கு கண்கள் குவித்து காத்திருக்கிறது என விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி- காளை உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வடசேரியில் சித்திரை திருவிழாவையையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை களமிறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து காளை அவிழ்த்து விட்டபோது சீறிப்பாய்ந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புக் கட்டையில் மோதியதுமே சுருண்டு விழுந்தது. இதனையடுத்து மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தது. இதற்கு முன்பும் இதே போல விஜயபாஸ்கரின் காளை வாடி வாசலில் மோதி உயிர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து தனது காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் உயர் இழந்தது விஜயபாஸ்கரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில் தனது காளை நினைவாக விஜயாபாஸ்கர் எழுதிய கண்ணீர் கடிதம் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
விஜயபாஸ்கர் இரங்கல் கடிதம்
அதில், சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்தபோது, திருவப்பூர் ஜல்லிக்கட்டில் #கருப்பு_கொம்பன் காணாமல் போன செய்தி இடியாய் இறங்கியது. கிட்டதட்ட 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் இல்லம் வந்துசேர்ந்தான். இல்லம் வந்து சேர்ந்தவனை மீண்டும் இழந்து தவிப்போம் என ஒரு கணம்கூட எண்ணியதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலை நெஞ்சுரத்தோடு சந்தித்தவன் என் கருப்பு கொம்பன். கண் இமைக்கும் நொடிகளில் சீறிப்பாய்ந்து கால் பதித்த களத்தில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவன். அனல் பறக்கும் வேகத்தில் சுற்றிச் சுழன்றாலும், இல்லம் வந்து விட்டால் சுட்டிக் குழந்தையாய் மாறி விடுவான்.
இதயம் கலங்கி தவிக்கின்றோம்
மண் பேசும் பெருமைகளையும், எண்ணிலடங்கா பரிசுகளையும், அள்ளிக் குவித்த கருப்பு கொம்பன், சில தினங்களுக்கு முன்பு வடசேரிப்பட்டி வாடிவாசலில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டான். தமிழ்நாட்டின் வாடிவாசல்களில் எல்லாம் பம்பரம் போல் சுற்றிச் சுழன்ற என் கருப்பு கொம்பன் இன்று அதிகாலை தன் பயணத்தை முடித்துக் கொண்டான். வாடிவாசல் உன் வருகைக்கு கண்கள் குவித்து காத்திருக்கிறது... நாங்கள் இதயம் கலங்கி தவிக்கின்றோம்... எம் கருப்பு கொம்பா... சென்று வா... மீளாத்துயரில்... விஜயபாஸ்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்