தமிழகத்தின் மாநில தலைமை தகவல் ஆணையராக தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் மாநில தலைமைத் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல காலியாக இருந்த தகவல் அணையர்கள் பதவி இடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் யார் ?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் சார்பில் கடந்த 2005-ம்ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் உள்ளவர்கள் பொதுமக்கள் சார்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது முக்கிய பொறுப்பாகும். இந்த பதவியில் இதற்கு முன்னதாக ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபால் இருந்தார். அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்தப் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், தமிழக மாநில தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தரை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.

தகவல் ஆணையர்களும் நியமனம்
முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும்வரை இருப்பார். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷகில் அக்தர் 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். சிபி - சிஐடி டிஜிபி பணியில் இருந்தவர் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார். இதே போல தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் காலியாக இருந்த ஆணையர்களின் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன. முன்னாள் ஏடிஜிபிக்களான தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து, செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை தமிழக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
