அரியலூர் மாவட்டம், கோடாலிக் கருப்பூரிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இரண்டு நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பணம் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் கடுப்பாகி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, தா.பழூர் அருகேயுள்ள கோடாலி கருப்பூரிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் நாள்தோறும், மக்கள் தங்களது பழைய 500, 1000 ரூபாய்களை மாற்றியும், தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை சேமிப்புக் கணக்கில் வரவு வைத்தும் வருகின்றனர்.

இதனால் இந்த வங்கியில் நாள்தோறும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பணம் வழங்குவதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையும் இந்த நிலையே தொடர்ந்தது.

இதனால் பணத்தை வரவு வைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், வங்கியின் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுரித்து, தகவலறிந்த தா.பழூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்,

இதனால் அணைக்கரை சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.