Edappadi Palaniswami: வேலூர் கோட்டையில் நடைபெற்ற அதிமுக இளைஞர் பாசறை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்றும், 2026 தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் கிடையாது எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் 'இலக்கு 2026' என்ற தலைப்பில் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"சென்னை கோட்டைக்குச் செல்வதற்காக வேலூர் கோட்டையில் திரண்டிருக்கிறோம். இப்போது கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்குத்தான் இந்த மாநாடு.
மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி: வானதி சீனிவாசன்
ஒரு கட்சி வலுவாக இருப்பதற்கு அக்கட்சியில் இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் கட்சி அதிமுகதான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடைய அறிக்கைகள் பாஜகவின் அறிக்கைகள் போல இருப்பதாகச் சொல்கிறார். அதிமுக மக்களை நம்பியே இருக்கிறது. வேறு யாரை நம்பியும் இல்லை.
குழந்தைகள் தன்னை 'அப்பா' என்று அழைப்பதாக ஸ்டாலின் புதுசாகக் கண்டுபிடித்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் முதல் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் 'அப்பா அப்பா' என்று கதறும்போது முதலமைச்சருக்கு அந்தக் குரல் கேட்கவில்லையா?
புதிய கல்விக்கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழகத்துக்கு நிதி விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு கூறுவது சரியல்ல. தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியை வழங்க மறுக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களை பார்த்து நிதியை வழங்குங்கள்.
திமுகவுக்கு கொள்கையும் கிடையாது, கூட்டணியும் கிடையாது. பதவிக்காகவும் அதிகாரத்துக்காகவும் அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக் கூட்டணி அமையும். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
முன்னதாக, அதிமுகவைச் சேர்ந்த் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்" என்று கூறியிருப்பது குறிப்பிட்டத்தக்கது.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள்.! நாற்காலி நிரந்தரமானது அல்ல- அண்ணாமலைக்கு சீமான் எச்சரிக்கை

