நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், காலாவதியான குளிர்பானங்கள், மிக்சர், காரச்சேவு, சிப்ஸ் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாகரனுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, கருணாகரன் தலைமையில், நாகர்கோவில் நகர உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரநாராயணன், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பிரவீன் ரகு, திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி சிதம்பரம் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, நேற்று திடீரென நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

மொத்தம் 20 கடைகள் சோதனை செய்யப்பட்டதில், சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட 30–க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை தரையில் கொட்டி அழிக்கப்பட்டன.

மேலும் சில கடைகளில் பெரிய, பெரிய பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மிக்சர், காரச்சேவு, சிப்ஸ் வகைகளை சோதனை செய்ததில், அவற்றில் தயாரித்த தேதி, பயன்படுத்தும் தேதி, உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கிய விவரச் சீட்டுகள் எதுவும் இல்லை. எனவே, மிக்சர், காரச்சேவு, சிப்ஸ் போன்ற காரவகைகள் சுமார் 400 கிலோ பறிமுதல் செய்து, அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி அழித்தனர்.

மேலும் ஈ மொய்க்கும் வகையில் திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட வடை, பஜ்ஜி போன்றவையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் எனவும், மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து அதிகாரிகள் எழுதியும் வாங்கியுள்ளனர்.

இந்தச் சோதனையை பேருந்து நிலையத்தில் இருந்து அனைவரும் கண்டு வியப்படைந்தனர்.