ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்… குற்றாளத்தில் வெள்ளப்பெருக்கு!!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் நீர் பாதுகாப்பு வளைவின் மீது ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேபோல் ஐந்தருவியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வழக்கமாக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் மக்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல் இந்தாண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவியதால் தற்போது வரை சுற்றுலா தலங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரத்து குறைந்துள்ளது. கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் மக்கள் முன்பு போல் அதிகம் அங்கு வருவதில்லை என அந்த வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கொட்டிய தொடர்மழை காரணமாக பிரதான அருவியான குற்றால அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து பாதுகாப்பு வளைவை தாண்டி கொட்டுகிறது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனிடையே மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. ஆகவே மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.