குமரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் கேரள மாநிலம் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகளும் நிவாரணப்பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டிலும் தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிரது. குமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பெருஞ்சானி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

குழித்துறை, மங்காடு, முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் வீடுகளுக்குள் மார்பளவு வரை தண்ணீர் தண்ணீர் உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கோவை மாவட்டம், வால்பாறையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அரசு பேருந்து மனையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மேலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.