திருவள்ளூர்

தமிழக எல்லையில் அத்துமீறி மீன்பிடிக்கும் ஆந்திர மீனவர்களை தடுக்க புகார் அளித்ததன் பேரில் பழவேற்காடு ஏரியில் காவலாளர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த பழவேற்காடு ஏரியில் தமிழக, ஆந்திர மாநில எல்லையில் உள்ளது.

இந்த ஏரியில் ஆந்திர மீனவர்கள் இரண்டு பங்கும், தமிழக மீனவர்கள் ஒரு பங்கும் மீன்பிடி தொழில் செய்து வரும் வகையில் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தமிழக எல்லைப் பகுதியில் ஆந்திர மீனவர்கள் சிலசமயம் எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடிக்கின்றனர். இதைத் தட்டிக் கேட்கும் தமிழக மீனவர்களை, ஆந்திர மீனவர்கள் கடுமையாக தாக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த 2014–ஆம் ஆண்டு தமிழக, ஆந்திர மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இரு மாநில அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு மீனவர்களும் எல்லையை கடந்து மீன்பிடிக்க கூடாது என எச்சரித்தனர்.

இந்த நிலையில் 25–ஆம் தேதி ஆந்திர மீனவர்கள் 70 படகுகளில் வந்து தமிழக எல்லையான கள்ளேரிமேடு பகுதியில் பழவேற்காடு ஏரியில் அத்துமீறி மீன் பிடித்தனர்.

இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பொன்னேரி தாசில்தாரிடம் நேற்று புகார் அளித்தனர்.

இதனையடுத்து பழவேற்காடு பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட காவலாளர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பிரச்சனை தொடர்பாக மீன்வள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.