இராஜபாளையம்,

இராஜபாளையம் அருகே அம்மையப்பபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் நியமனம் செய்யப்படாததை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தையே புறக்கணித்து போராட்டத்தைத் தொடங்கினர்.

இராஜபாளையம் அருகே அம்மையப்பபுரத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் 42 மாணவ – மாணவிகள், அரசு நடுநிலைப் பள்ளியில் 28 மாணவ – மாணவிகள் என 70 பேர் படிக்கின்றனர்.

ஒரு தலைமை ஆசிரியர், இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இரண்டு இடைநிலை ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

இங்கு பணியாற்றி வந்த அறிவியல் ஆசிரியர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்று விட்டார்.

அன்றிலிருந்து இன்று வரை அறிவியல் ஆசிரியர் இல்லாமல் பள்ளி இயங்குகிறது. இதனால் தங்களது குழந்தைகள் அறிவியல் பாடத்தில் பின்தங்குகின்றனர் என்றும், ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்பக் கோரியும், கிராம மக்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை, பணியிடம் நிரப்பப்படவும் இல்லை.

ஆசிரியர் நியமிக்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கூடத்தையே புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் நேற்றுத் தொடங்கியது. மாணவர்கள் வகுப்புக்கு வராத நிலையில் ஆசிரியர்கள் மட்டும் அமர்ந்து கொண்டு வாசலை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

இது தொடர்பாக மாணவ – மாணவிகளின் பெற்றோர்களின் கருத்து:

“எட்டாம் வகுப்பு வரை அறிவியல் ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு பயில அருகில் உள்ள தளவாய்புரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு மற்ற மாணவர்களை விட அறிவியல் பாடத்தில் மிகவும் பின் தங்கும் நிலையில் இந்த மாணவர்கள் இருக்கின்றனர்.

இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது.

எனவே, அறிவியல் ஆசிரியர் நியமனம் செய்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்புகிறோம். இல்லையேல், யாரையும் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்” என்றுத் தெரிவித்தனர்.