fire start at 11am at private factory till night can not control fire
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பைக் மற்றும் கார்களுக்கு விளக்குகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் காலை 11 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீயை இரவு ஆகியும் அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திகைத்து வருகின்றனர். கட்டுக்குள் வராத தீயால் இதுவரை ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் அச்செட்டிப்பள்ளியில் எப்.ஐ.இ.எம். என்ற தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு உரிய முகப்பு விளக்குகள், சாலையில் செல்லும்போது திரும்ப ஒளிரவிடப்படும் விளக்குகள் (இன்டிகேட்டர் விளக்குகள்) போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
இங்கிருந்து இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அந்த விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில் ஓசூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை இந்நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம்போல வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது காலை 11 மணிக்கு திடீரென விளக்குகள் தயாரிக்ககூடிய இடத்தில் தீப்பிடித்தது.
இந்த தீ சிறிது சிறிதாக பரவி தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் பற்றியதால் சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் உடனே நிறுவனத்தில் இருந்து வெளியேறினர். மேலும், ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பேரில் ஓசூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். அந்த நேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடியும் தீ கட்டுக்குள் வராததால் அருகில் உள்ள கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி அலுவலர் அண்ணாதுரை, ஓசூர் நிலைய அலுவலர் ஜெய்சங்கர் உள்பட 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல தனியார் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜேந்திரன், மத்திகிரி காவல் ஆய்வாளர் சரவணன், நகர காவல் ஆய்வாளர் ராஜாசோமசுந்தரம் மற்றும் காவலாளார்கள் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
நேற்று இரவு வரையில் தீ அணைக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்றது. ஆனாலும், தீயை அணைக்க முடியவில்லை. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே சேதத்தின் மதிப்பு முழுமையாக தெரிய வரும் என்றும், தற்போது ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மத்திகிரி காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
