சென்னை ஓட்டேரி சச்சிதானந்தம் தெரு, டோபிகானா பகுதியில் 50க்கு மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர் ஜான் (54). பெயின்டர். இவரது மனைவி திலகா (50).

மதியம் திலகா வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அவரது வீட்டின் குடிசையில் திடீரென தீப்பற்றியது. அதை அணைக்க முயன்றபோது, வீடு முழுவதும் எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், குடும்பத்தினருடன் வெளியே ஓடினார். அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால், அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ பரவியது.

இதை பார்த்ததும், குடிசை வீடுகளில் இருந்த பொதுமக்கள் வெளியே அலறியடித்து கொண்டு ஓடினர். தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. அனைத்து குடிசைகளுக்கும் தீ வேகமாக பரவியது. 

தகவலறிந்து வேப்பேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 வாகனங்களில் 30க்கு மேற்பட்ட வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், 30க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது. புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணங்களை விசாரிக்கின்றனர்.