சென்னை குரோம்பேட்டை ரயில்வே நிலையம்  அருகே  இருசக்கர வாகனங்கள் திடீரென பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை குரோம்பேட்டை ரயில்வே நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் திடீரென பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரயில் நிலையம் மக்கள் நடமாட்டம் மிகுந்தது. மேலும் ரோம்பேட்டையில் ரயில் நிலையம் மற்றும், பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையம் அருகே, காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாகவே அந்த காலி இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த பழைய வாகனங்களில் திடீரென தீப்பிடித்து, கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் ரயில் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த ரயில்வேத்துறை அதிகாரிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

தீ வேகமாக பற்றி எரிந்ததால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் வாகனங்கள் எரிந்து நாசமானது. இதனால் தீ அக்கம்பக்கம் பரவாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததை அடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காலி இடத்தில் வாகனங்களில் தீப்பற்றியது எப்படி? யாராவது மர்ம ஆசாமிகள் கை தீ வைத்தனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.