தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த சக்கராபள்ளி பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 65 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. குடிசைப் பகுதியில் பொதுமக்கள் அலர்ட் ஆக இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அய்யம்பேட்டையை அடுத்த சக்கராபள்ளியில்  இன்று அதிகாலை 4 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது ஒரு குடிசையில் திடீரென தீ பிடித்தது.

அந்தத் தீ மளமளவென அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியது. அப்போது ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் தீ வேகமாக பரவியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தஞ்சாவூர் உள்ளிட்ட 4 இடங்களில் இருந்து விரைந்து வந்த 15 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 65க்கும் மேற்பட்ட குடிசைகள் தீ பிடித்ததில் எரிந்து நாசமாயின. லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதடைந்தன. சம்பவ இடத்தை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர்  அண்ணாதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

வீடுகளை இழந்துள்ள அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த அய்யம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.