fire accident in pudupet
கடந்த வாரம் சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 36 மணி நேரத்துக்கு மேலாக அந்த கட்டிடத்தில் தீ எரிந்து கொண்டு இருந்தது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 200க்கு மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது, அங்குள்ள தீ அணைக்கப்பட்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கும் பணி நடந்து வருகிறது. இன்று 4வது நாளாக பணி தொடர்கிறது.
இதைதொடர்ந்து நேற்று மதியம் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகில் உள்ள ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில், தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதேபோல் சென்னை நகருக்கு மின்சாரம் வழங்கும் வல்லூர் அனல் மின் நிலையத்தில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதுடன், சென்னை மின் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வருகின்றனர்.இதையொட்டி தினமும் 5 வேளை தொழுகைக்காக அந்தந்த பகுதி பள்ளி வாசல்களுக்கு சென்று வருகின்றனர். மாலை 6 மணியளவில் தொழுகை முடிந்து, நோன்பு முடிப்பார்கள்.
இதையொட்டி சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில், இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து தொழுகை நடத்துவதற்காக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலிறிந்து சிந்தாதிரிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. புகாரின்படி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் துவங்கிய நேரத்தில் குடிசைகளில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இதனால், நகரின் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.
ஆனால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர், அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
