கோவை வெள்ளலூர் மறைமுக தேர்தலின் போது திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம்  தொடர்பாக அதிமுகவை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கோவை வெள்ளலூர் மறைமுக தேர்தலின் போது திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுகவை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலின் போது திமுக-அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல மதியம் துணைத் தலைவர் தேர்தல் நடந்த போது வாக்கு பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதால் துணைத் தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி, வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு திமுக, அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் வந்திருந்தனர். அப்போது, திடீரென இரு கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தில் திமுக 4 வது வார்டு கவுன்சிலரான குணசுந்தரியின் கணவர் செந்தில்குமாருக்கு மண்டை உடைந்தது. மேலும், பார்த்திபன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, நடந்த மறைமுக தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மருதாசலம் பேரூராட்சி தலைவராகவும், கணேசன் துணை தலைவராகவும் வெற்றி பெற்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து திமுக சார்பில் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், அதிமுககை சேர்ந்த வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலத்தின் மகன் குமரேசன், சபரி பிரியன், கரிகாலன், கார்த்திக்ராஜா, மனோஜ்குமார், ரகுபதி, சண்முகம், சவுந்திரராஜ், நாகராஜ் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், சிறைபிடித்தல், காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கைதானவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலின்போது திமுக பெண் கவுன்சிலரின் கண்வர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுகவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.