கடலூர்

கடலூரில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. இதனை காண ஓடிவந்த பெண்கள், குழந்தையை கண்டதும் கதறி அழுதனர். 

நேற்று காலை கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வெள்ளாற்றில் பச்சிளம் குழந்தை ஒன்று ஈக்கள் மொய்த்தபடி அழுகிய நிலையில் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் என்னவென்று பார்ப்பதற்காக அருகில் சென்றனர். அது குழந்தை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர், இது குறித்து உடனே புவனகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலாளர்கள் அந்த குழந்தையை பார்வையிட்டனர். அப்போது அக்குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும் என்றும், அது பெண் குழந்தை என்றும் அறிந்தனர். 

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் இருந்ததால் அக்குழந்தை இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும் என்று காவலாளர்கல் கணித்தனர். பின்னர், அக்குழந்தையின் உடலை கைப்பற்றிய காவலாளர்கள், உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒன்றரை வயது பெண் குழந்தையை யாராவது கடத்தி கொண்டுவந்து கொலை செய்தனரா? அல்லது பெண் குழந்தை என்பதால் பெற்றோரே வெள்ளாற்றில் வீசிச் சென்றனரா? என்று பல்வேறு கோணத்தில் காவலளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். 

அழுகிய நிலையில் பெண் குழந்தை ஒன்று சடலமாக கிடக்கிறது என்ற தகவல் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. உடனே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் ஓடிவந்து குழந்தை இறந்து கிடப்பதை பார்த்தனர். சிலர் அழுது கொண்டே  அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.