தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து. அனுபவங்கள் மூலம் வாழ்க்கைக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து, அதற்காக மாணவர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம் 12,63,550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.126.355 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும். மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும், மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், உடல், மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும். மேலும் விவசாயம் சார்ந்த அறிவுடன், மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும், மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது. இந்நிலையில், மாடி தோட்டம், மூலிகை தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தகமில்லா தினத்தில், மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப் பொருள் வழங்க ரூ.1.2 கோடி ஒரு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.