சண்டையைத் தடுக்கச் சென்ற தந்தை திடீர் சாவு; பதறிப்போன மகன் கதறி அழுகை...
திருவாரூரில், சண்டைப் போட்டுக் கொண்ட இருவரை சமாதானப்படுத்த முயன்ற தந்தை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதறிப்போன மகன் கதறி அழுதது பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்
திருவாரூரில், சண்டைப் போட்டுக் கொண்ட இருவரை சமாதானப்படுத்த முயன்ற தந்தை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதறிப்போன மகன் கதறி அழுதது பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், காட்டூர், வாழைக்கொல்லை தெருவைச் சேர்ந்தவர் இராமையன் (70). இவரது மகன் இளையராஜா (37). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் ஆசைத்தம்பி (37).
இளையராஜா மற்றும் ஆசைத்தம்பி இருவரும் சண்டைபோட்டுக் கொண்டனர். இதனைப் பார்த்த இராமையன் இருவரையும் தடுத்தி நிறுத்தி சமாதானம் படுத்த முயன்றார். அப்போது இருவரும் இராமையனை தள்ளிவிட்டனர். ஆனால், மறுபடியும் இருவரையும் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினார் இராமையன்.
அப்போது இராமையனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில், அவர் மயக்கம்போட்டு கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இராமையன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறி அதிர்ச்சி அளித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காட்டூர் வி.ஏ.ஓ உமாமகேஸ்வரி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். மேலும், இராமையனின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சண்டை குறித்தும் இராமையன் இறந்தது குறித்தும் காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சண்டையை சமாதானப்படுத்த முயன்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.