தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்றைய போராட்டத்தின்போது, கொட்டும் மழையில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர். தங்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டும், தங்கள் முன்பு மண்டை ஓடுகளை வைத்துக் கொண்டும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார், தமிழகம் திரும்புங்கள் எனக் கூறி வருகின்றனர். ஆனால், எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதனை அடையாளப்படுத்தவே எங்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போராடி வருகிறோம் என்று அய்யாக்கண்ணு தெரவித்தார்.