farmers protest in chennai

அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்றும், முடிந்த பின்னர் அடிமைகளாகவும் நடத்துகின்றனர் என அய்யாகண்ணு கூறினார்.

தமிழக விவசாயிகளின் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 45 நாட்கள் போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அய்யாகண்ணு.

ஆரம்ப காலத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்திய அய்யாகண்ணு, கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்தினார்.

இவருக்கு ஆதராக நாடு முழுவதும் பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த 21ம் தேதி டெல்லியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு கூட்டம் நடத்தினர்.

அதில், மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அய்யாகண்ணு, சென்னை சேப்பாக்கத்தில், அரை நிர்வாண போராட்டத்தை தொடங்கியுள்ளார். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம், அய்யாகண்ணு கூறியதாவது:-

தினமும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த போராட்டத்தை நடத்துவார்கள். இன்று கரூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் போராட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்வார்கள்.

இதற்காக தினமும் காவல்துறையில் நாங்கள் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டம் அடுத்த மாதம் 10ம் தேதி வரை தொடரும்.

எங்களது போராட்டத்தின் குறிக்கோள், மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றக் கூடாது. விவசாயிகளை சுட்டு கொள்ள கூடாது. இந்த போராட்டத்தை உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி முடித்து வைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் செல்வதற்கு முன் இதை செய்ய வேண்டும்.

தேர்தல் வரும்போது விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தபின்னர் எங்களை அடிமையாக பார்க்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.