Farmers meeting in Perambalur The farmers who say the cart is wrong Will it rain
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது குறைகளை வண்டி வண்டியாக எடுத்துரைத்துனர். அனைத்தையும் கேட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். தங்களது குறைகள் எப்போ தீரும் என்று விடிவுக்கு காத்திருக்கின்றனர் விவசாயிகள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்குய் ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது:
மத்திய அரசு, கரும்புக்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே மத்திய அரசு, 1 டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.3 ஆயிரம் என அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று வேலையாக 100 நாள் வேலை திட்டத்தை மாற்றி 150 நாள்களாக வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி விவசாயிகளுக்கு தடையின்றி சம்பளம் வழங்க வேண்டும்.
பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும்.
தற்போது நிலவும் வறட்சியான சூழலில் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எளிதில் கடன் பெறமுடியாத நிலை உள்ளது. விவசாய பணிகளுக்கு பணம் இல்லாததால் கோடை உழவுப்பணி தாமதமாகிறது. எனவே கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய கணக்கின் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்க வேண்டும்.
குடிமராமத்து பணியின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி, குளம் தூர்வாரும் பணிகள் மந்தமாக நடக்கிறது. அந்த பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.
மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்க வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்படும் கடன்தொகையில் 35 சதவீதம் ரொக்கமாக வழங்க வேண்டும்.
பாசன ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்கு ஆகியவற்றை அகற்றி தூர்வார வேண்டும்.
அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட ஆட்சியர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.
இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் முருகேசன், வேணுகோபால், டி.கே.ராமலிங்கம், மாணிக்கம், ராமராஜ் உள்பட பலர் பங்கேற்று கோரிக்கை குறித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், வேளாண்மை இணை இயக்குனர் சுதர்சன், மாவட்ட வருவாய் அலுவலர் (எறையூர் சர்க்கரை ஆலை) மாரிமுத்து உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
