farmers loan...tamil nadu govt appeal in supreme court

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி. முரளிதரன் ஆகியோர்,தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறப்பித்த அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, அந்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போரின் கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது விரைவில விசாரண நடைபெறவுள்ளது.