Asianet News TamilAsianet News Tamil

கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகள் அலைக்கழிப்பு - ஆட்சியரிடம் புகார்...

farmers give complain to collector about farm loan in cooperative societies
farmers give complain to collector about farm loan in cooperative societies
Author
First Published Feb 28, 2018, 11:41 AM IST


திண்டுக்கல்

கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளை, அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர் என்று ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் கால்வாய், பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, பயிர் காப்பீட்டு தொகை உள்பட பல கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்தனர். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாய கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இதில் விவசாயிகள், "கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளை, அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். எந்த நிபந்தனையும் இன்றி விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் பல்வேறு சான்றிதழ்களை கேட்டு அலைக்கழிக்கின்றனர்.

எனவே கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிட்டா, அடங்கல் மட்டும் வைத்து குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குகின்றனர்" என்றதற்கு

கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பழனிவேல், "ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் மட்டுமே சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன. அதற்கு குறைவாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம், அதிகாரிகள் சான்றிதழ்கள் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

"முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிலக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான நெற்பயிர்கள் தற்போது தான் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பாசனத்துக்கு பயன்படுத்த வசதியாக 20 நாட்களுக்கு மட்டும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்" என்று விவசாயிகள் கேட்டனர்.

அதற்கு ஆட்சியர், "தற்போது விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மூன்றாவதாக, "பாலாறு - பொருந்தலாறு அணை பகுதியில் தடுப்பணை அமைத்து பழனி முருகன் கோவிலுக்கு தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை தடுத்து பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கும் படி செய்ய வேண்டும்" என்றதற்கு ஆட்சியியர் "இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios