புதுக்கோட்டை

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் கடையடைப்பு மற்றும் ஊர்வலத்தில் கிராம மக்கள், வணிகர்கள் ஈடுபட்டனர்.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 29 நாள்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட வடிவை கையில் எடுத்த விவசாயிகள் ஒரு கட்டத்தில் முழு நிர்வாணத்தோடும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆவுடையார்கோவில் அருகே உள்ள கரூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், வணிகர்கள் 150-க்கும் மேற்பட்டோர் நேற்று கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,.

இதனைத் தொடர்ந்து வணிகர் சங்க தலைவர் பழம்பதி தலைமையில் வணிகர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆகியோர் கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று “விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்” என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் சேவுகப்பெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி, கரூர் வர்த்தகர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.