கோயம்புத்தூர் அருகே பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு பாய்ச்சி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பிரதான கால்வாயை நம்பி சுமார் 5,400 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.

பொள்ளாச்சியை சுற்றியுள்ள சேத்துமடை, தம்பம்பதி, சரளப்பதி, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பருவமழை பொய்த்ததால் தென்னை மரங்களுக்கு ஊற்ற போதிய தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு பாய்ச்சுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய அளவில் பருவமழை பெய்யாததால், விவசாயத்திற்கு டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தென்னை மரங்களுக்கு பாய்ச்சி அதனை காப்பாற்றி வருவதாகவும், இதற்கு ரூ.800 முதல் ரூ.1,500 வரை செலவு செய்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சேத்துமடை பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைவில் சீரமைத்து, பாசனத்திற்கு தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.