ஃபேஸ்புக் மூலம் சிறுமியை காதலில் விழவைத்து, அவரிடமிருந்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த கல்லூரி மாணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமூக வலைதளங்கள் வாயிலாக இளம்பெண்களையும் சிறுமிகளையும் காதல் வலையில் சிக்கவைத்து, அவர்களை பயன்படுத்திவிட்டு இறுதியில் அவர்களை ஏமாற்றும் செய்திகள் வாடிக்கையாகிவிட்டன. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், பெண்கள் கவனமாக இல்லாமல் இதுமாதிரியா ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கிக்கொண்டே தான் இருக்கின்றனர். 

அதிலும் ஃபேஸ்புக் மூலமாக மலரும் காதல் பெரும்பாலான தவறுகளுக்கு காரணமாக அமைகின்றன. இதுபோன்றவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தங்கள் குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களின் அபாயம் குறித்தும் பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்களிடம் கூட ஸ்மார்ட்போன் இருப்பதால், அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. 

அதை மீண்டும் பறைசாற்றும் வகையில், ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் என்ற கல்லூரி மாணவர், ஃபேஸ்புக்கில் பெயர் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக வில்லியம்ஸ் குமார் என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இளம்பெண்களை கவர்ந்திழுக்கும் வகையில், நவநாகரீக உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்துகொண்டே வந்துள்ளார்.

பேஸ்புக்கில் உள்ள பள்ளி சிறுமிகளை குறிவைத்து, அவர்களின் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து, அவர்களை தன்வசப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரது வலையில் சென்னை எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சிக்கியுள்ளார். இவர்களிடையேயான ஃபேஸ்புக் நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பார்க், தியேட்டர், கடற்கரை என உலவியுள்ளனர்.

அந்த சிறுமியிடம் தன் மீதான நம்பிக்கையை வளர்த்த பின்னர், அவரிடமிருந்து பணம் பறிக்க திட்டமிட்ட ராகுல், சொந்தமாக தொழில் தொடங்க பணம் வேண்டும் என கூறியுள்ளார். சிறுமி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், வீட்டிலிருந்து நகைகளை எடுத்துவருமாறு மூளைச்சலவை செய்துள்ளார். சிறுமியும் வீட்டிலிருந்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை எடுத்து சென்று ராகுலிடம் கொடுத்துள்ளார். மொத்தமாக 20 சவரன் நகைகளை சிறுமியிடம் இருந்து ராகுல் பெற்றுள்ளார். 

வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதையடுத்து அரும்பாக்கம் போலீஸில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சிறுமியை ஏமாற்றிய ராகுலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.