Extend the period of repayment of the farmers liabilities
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடன்தொகையை திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்படும் என்றும், சாகுபடிக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் எனவும் பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வங்கிகள் கெடுபிடி செய்யக்கூடாது எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, இப்பிரச்சனையில் விவசாயிகள் நிவாரணம்பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற விவசாயிகளைக் கடனை உடனே செலுத்த நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழக அனைத்து வங்கிகள் கூட்டமைப்புக்கு வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம், வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்துமாறு நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தங்களின் வாழ்வாதாரம் காக்க வங்கிகள் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பு எழுதியுள்ள பதில் கடிதத்தில், விவசாயிகள் கடன்தொகையை திருப்பிச் செலுத்தும் காலம் மாற்றியமைக்கப்படுவதாகவும், சாகுபடிக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
