வங்கி கணக்கு உள்ள அனைவரும் காப்பீடு திட்டங்களில் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வங்கி சேவை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து விழிப்புணர்வு முகாமைத் தொடக்கி வைத்து 116 பயனாளிகளுக்கு ரூ.94.90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் வங்கி சேவை என்ற திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கி கணக்கு தொடங்கியுள்ள நபர்கள் அனைவரும் காப்பீட்டுத் திட்டங்களில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கில் ரூபே அட்டை உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு, வங்கி கணக்கு உள்ள 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.12 மட்டும் பிரீமியம் செலுத்தி ரூ.2 இலட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.
18 வயது முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் ரூ.330 மட்டும் ஆண்டு பிரீமியம் செலுத்தி இயற்கையான மரணத்துக்கு ரூ. 2 இலட்சம் காப்பீடு பெறலாம்.

18 வயது முதல் 40 வயது வரை வயதுக்கேற்ப குறைந்த மாதாந்திர பிரீமியம் செலுத்தி 60 வயது முதல் மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். சிறு, குறு தொழில்களுக்கான எளிய முறை கடன் திட்டம், உற்பத்தி முனைவோர், பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம், பிரதமரின் பயிர் பாதுகாப்புத் திட்டம், வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பு ஆகியவை வங்கி சேவைகளில் முக்கியமானதும், அவசியமானதும் ஆகும்.

இப்போது அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும். பொதுமக்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துக்கொண்டு பயனடையலாம்” என்றார்.

முகாமில் இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் சி.ஆர்.கோபிகிருஷ்ணன் வரவேற்றார். வேளாண் இணை இயக்குநர் ஆர்.களியராஜ், இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் பி.வீரராகவன், நபார்டு வங்கி துணைப் பொது மேலாளர் எஸ்.கே.தினேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சந்திரசேகர், ஈரோடு சிட்பி வங்கி மேலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஆயுள் காப்பீட்டுக் கழக மண்டல மேலாளர் சேலம் என்.ராமகிருஷ்ணன், கனரா வங்கியின் முதன்மை மேலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.