பொங்கலூர்

திருப்பூரில், சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்து, காளை மாட்டுடன் ஒன்றிய அலுவலகம் முன்பு இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் வலுக்கிறது. தற்போது சல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்பது இளைஞர்கள் உரிமைக் குரலாக மாறி பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

பொங்கலூரில் சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்து நேற்று இளைஞர்கள் காளை மாடுடன் ஒன்றிய அலுவலகம் முன்பு கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டமாகத் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு நாகராஜன், தேவராஜன், மோகன்குமார், சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார்.

அப்போது “மத்திய அரசும், மாநில அரசும் சல்லிக்கட்டு விசயத்தில் தலையிட்டு தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்”,

“தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும்”,

“நாட்டு மாடு இனத்தை அழியாமல் காப்பாற்ற வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் திமுகவை சேர்ந்த அசோக்குமார், வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாட்ராயன், இந்து முன்னணியை சேர்ந்த சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சல்லிக்கட்டுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். .