கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெளிநாட்டில் இருந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் நிதியுதவி அளித்திருக்கலாம் என தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய '' ஸ்டிங் ஆபரேஷன்'' மூலம் தெரியவந்திருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கு எதிராக பெரும் பேராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலக அளவில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பேராட்டமாக கருதப்பட்டது. இந்த போராட்டத்தை சுப. உதயகுமார் என்பவர் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்தனர். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். இரண்டு ஆண்டுகளாக தொய்வின்றி நடந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அப்போதைய மத்திய அரசு திணறியது.

இந்த போராட்டம் நடக்கும் போதே வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக புகார் எழுந்தது. அப்பொழுது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதில் கூறப்பட்டுள்ளது.