சேலத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பொறியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் உடையாப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய பொது கட்டுமான வட்டத்தில் செயற்பொறியாளராக வேலை செய்பவர் வெங்கடேசன். அதே அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக நடேசன் என்பவரும் வேலை பார்த்து வருகின்றனர். 

தமிழ்நாடு மின் வாரியம் மூலமாக பல்வேறு திட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட இரும்பு கம்பம், மின்சாரம் கடத்தும் கம்பிகள், சிமெண்ட் மற்றும் இதர கட்டுமான பொருட்கள், என பலவகையான தளவாட பொருட்களை, அதிகாரிகள் இருவரும், திருடி விற்பனை செய்தகதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

இதையடுத்து இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், வெங்கடேசன் மற்றும் நடேசன் ஆகிய மின் வாரிய தளவாடங்கள் அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. 

இரு அதிகாரிகளும் தளவாட பொருட்களை திருடி விற்பனை செய்த பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஏராளமாக குவிந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மின்வாரியத்தின் சென்னை தலைமை அலுவலக அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்ட இரு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.